Friday, January 02, 2009

இலவம் பஞ்சாக என்னில் பறக்கிறது


வணக்கம்.இந்த வருடத்திலிருந்து உங்களை,உங்களின் நினைவை நான் அடுத்த ஆண்டுக்கு சுமந்துச் செல்கிறேன். என்ன ஆச்சர்யம் இப்பரிமாற்றத்தின் சுமை அறியாமலே. நீங்கள் அதிகம் பாரம் தராமல் இருகிறீர்கள்,எனக்கு லகுவாக உங்களின் எடையை குறைத்து கொள்கிறீர்கள்.உங்களின் அன்பு இலவம் பஞ்சாக என்னில் பறக்கிறது.

அன்புடன்

கடற்கரய்

Friday, June 01, 2007

நீந்தி மறையா மீன் குஞ்சுகள்

(1)


வரைபடத்தில்மீன்களை நீந்தவிடும் - ஒருமகா கலைஞனைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.அவன்-பரப்பி வைத்தஆகாய விளைநிலத்துக் கீழ் நின்றுகாகங்கள் பறப்பதைமலைத்துப் போய்ப் பார்த்திருந்தான்.அந்நேரம்தூரப் பிரதேசத்தில் எங்கோஅவனது நுண்கலைகள் யாவும்விற்பனை கூட்டிக்கொண்டிருந்தன.


(2)


நீந்தவிட்டமீன்களை ஒவ்வொன்றாக எடுத்துகணக்கெழுதி வைத்திருந்தான் கலைஞன்.நான்திறந்த சமயம்அவனது கணக்குப் புத்தகம் முழுவதும்மீன்கள் நீந்தத் தொடங்கி இருந்தன.


(3)

தன் நூதனக் கலைகள் பூராவையும்பஞ்ச பூதங்களுக்குச் சமர்ப்பணம் செய்யவிருப்பதாகசொன்னான் கலைஞன்.'இதில் என்ன இருக்கிறது-நீதானம் செய்ய' என்றேன்.'உனக்கெதுவும் புரியாது' எனபுன்னகைத்தான்.அன்றென்ரசனைத் தடாகத்தில் சிலஅல்லிகள் மலர்ந்து திரிந்தன.


(4)

கலைஞனாக இருப்பதைப் பற்றிஒருநாள் என்னிடம்பெருமை பிதற்றிக்கொண்டான் கலைஞன்.'இதிலென்னதனி இன்பம் உனக்'கென்றேன்'புரிந்துகொள்' எனஒரு தூரிகை தந்து மறைந்தான்!


(5)


அவனதுமீன் குஞ்சுகள்என் பிறவிப் பெருங்கடல்நீந்த அலைகின்றனஇப்போது!
l

Wednesday, September 27, 2006

கடற்கரய் கவிதைகள்

வீடு
1.நிசப்தம் இறைந்து கிடக்கும்
வீட்டுக் கதவினைத் திறந்து
உள் பிரவேசிக்கின்றேன்.
அருகம் புல் மீதமர்ந்த பனித்துளி போன்று
சோபை கொண்டிருந்த
நிசப்தத்தின் மேலூர்ந்து
என் மென் பாதங்கள் செம்மறியாக மேய்கையில்
சட்டென்று உறைந்து பனிகட்டிகளாகின.
வீட்டின் சீதோஷ்ணம் குறையக் குறைய
வீட்டின் உள் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன் நான்.
தரை படிந்திருந்த திவலைகள் முழுக்கபனிக்கட்டியாகி
வீடு விறைக்கையில்
மெல்ல நிசப்தம் என் மீது மழையெனக் கவிழ்கிறது.
இதுயென் அடர்த்தியின் அளவை
ஒரு பக்கம் கூட்டிக் கொண்டேவும் செல்கிறது.
வீட்டின் உள்ளிருந்த நிசப்தம்
இப்பொழுது என்னுள் கூடு கட்டுகிறது.
2.
வீட்டிடமிருந்து கற்றுக் கொள்ள
என்ன இருக்கிறது நமக்கு.
எதற்கும் மௌனம் சாதிக்கும் அதனிடமிருந்து
எதை நாம்கிரகித்துக் கொள்ள இயலும்.
சகல சௌந்தர்யங்களையும்தனக்குள் அமுக்கிக் கொண்டு
வீங்கி வெடித்திராமல்பரிதவிக்குமதன் மனப்பாங்கும்
எதற்குதவும்.
ஒன்றிடமிருந்து எதை நாம் கற்றுக் கொண்டோமோ
அதை வைத்தே அவற்றை நாம் மடக்குகிறோம்.
புதிய வீடு
புது மொழியையா நமக்குப் பயிற்றுத் தருகிறது.
புதுமையென எதை நம்பினோம் நாம்.
வீட்டிடமிருந்து கிரகிக்க உள்ளது ஏராளம்.
நிசப்தம் தழைக்கத் தருவாகி நிற்கும்
அதன் விசால மனப்பாங்கிலிருந்து கற்றுக்கொள்:
ஒரு மிடறு நிசப்தத்தை.
3.முடிக்கப்படாத ஆட்டத்தின் சொச்சமாய்
வீடு முழுக்க இறந்து கிடக்கின்றன
கேரத்தின் காய்கள்.
ஆடப்படாத ஓர் ஆட்டத்தின் துவக்கமாய்
ஓர் ஆட்டத்தையாட
எண்ணிக்கொண்டபடி
சிதறிய சில்லுகளை சேகரித்தேன்.
அனேகத்தையும் ஓரிடம் குவித்தேன்
முற்றுப் பெறாத ஓர் ஆட்டம்
துவங்கப்பெறாதஓர் ஆட்டம்
சிதிலமடைந்த ஓர் ஆட்டம்
எவ்வாட்டம் உகந்தது.
ஆடத்துவங்கும்
என்னாட்டத்திற்கு முன்னதாக
நாலாத் திசைகளிலிருந்து
கணையாய்த் தாக்கி
ஆடிக் கொண்டிருந்தன
கேரத்தின் காய்கள்
எதற்கும் நன் நகர்ந்தே இருக்கிறேன்.
4.யாரும் இல்லாத வீட்டில்
மர்ம உறுப்புகளைப் பிடித்து
சுவைத்துக் கொண்டிருக்கிறா(ள்)ன்.
விழுதெனக் கிளைக்கும்
எல்லா அறையிலும்யாரோ ஒருவன்(ள்)
நம்மைச் சுகித்துக் கொண்டே இருக்கிறான்(ள்)
தன் அகோர நகங்களை வேரெனப் பாய்ச்சி
நமக்குள் சுகம்தேடும் அவனது-அவளது விரலில்
காமத்தின் அனேக முகங்கள் பிரதிபலிக்கின்றன.
யாரும்மற்ற வீடுகளில்
தனித்திருக்கும் ஒருவ(ளோ)னோடு
அங்கில்லாதவர்களும்
இருந்து கொண்டிருக்கிறார்கள்.
எண்ணாத்தில் உருக்கொள்ளும்
வெவ்வேறு முகத்தினை
யாருமற்ற வீட்டிற்கு
அவனா(ளா)ல் மட்டுமே கொன்டு வர இயலும்.
யாருமற்றா வீடே
நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கிறது.
யாருமில்லாத வீட்டில்
யார் யாரோ இருக்கிறார்கள்.
5.
சொல்ல முடியாத துக்கத்தினால்
நிரம்பிவழிகிறது வீடு.
மாறாக ஒரு தினம்
மகிழ்ச்சியினால் நிரம்பிவிடக் கூடும்.
அந்நாளில் அத்துவானத்திலிருந்த
அழகிய தேவதைகள்
நம் வீட்டை ரட்சிப்பார்கள்.
தேவனது விசாரிப்புக்கள்
உங்கள் கதவினை வந்து முறையிட்டு நிற்கும்
அந்நாளில்.
வீட்டின் கொள்ளளவிற்கேற்ப
வீட்டின்ஆரவாரம் கூடிக் கொண்டேவும் செல்கிகிறது.
சின்னஞ்சிறு வீட்டின் கொள்ளாத்த பாத்திரமாய்
மகிழ்ச்சி நிரம்புகையில்
அது,வேறுவேறு வீட்டிற்கும் பரவுகிறது.
எல்லா வீடும் விருந்தினர் பொழுதுகளை
ரம்மியமாக்கித் தருகின்றன.
இம் மந்திரத்தை கடவுள் வீடுகளுக்குப் பழக்கியிருக்கிறார்.
ராதையின் ரம்மியம் நமக்குள் ரகசியமாகிறது.
சிவந்த நெஞ்சில் காய்கள்
பழுத்துக் கனிகளாக உதிர்கின்றன.
விஜயத்தின் வீர்யத்தில்
ஏழு லட்சம் விளக்குகளை
எரியவைத்துவிடலாம் நீங்கள்.
ஒரு வீட்டின் மகிழ்ச்சி
கொஞ்ச தூரங்களை எட்டுகிறது,
ஒரு வீட்டின் துக்கம்
மாறாகபல மைல்களைத் தண்டி விடுகிறது.
6.
வீடில்லாதவர்களுக்கு
வீட்டைப்பற்றிய கனவுகள்
பெரிதாக இருக்கின்றன.
வீடுள்ளவர்களுக்கு
வீட்டின்அசௌகர்யங்களே
பிரதானமாகின்றன.
வாடகை வீட்டு மனம்
ஒரு சொந்த வீடு கேட்கிறது.
சொந்த வீட்டு மனம்
வடகைக்கு ஏங்குகிறது.
7.
வீடுகள்
வித விதமான வாசனைகளால் நிரம்பியது.
குறிப்பிட்ட உபாசனை
சில வீடுகளை நினைவுறுத்தும் நமக்கு.
வீடுகள் தனக்கென்றே
ஒரு ப்ரத்யேக வாசனையை
உருவாக்கிக் கொள்கின்றன.
உபாசனையோடு வந்து நசியைத் தட்டும்
அதிகாலை
முற்றத்தில் நட்சத்திரங்களைக் கொண்டுவந்து
கட்டிப் போட்டிருக்கிறது.
சுகந்தம் உள்ள வீட்டில்
பட்டாம் பூச்சிகள் குடியிருக்கும்.
தனியங்கள் வாசனை தூக்கலாய் இருக்கும்
என் பூர்வீக வீட்டில்
குருவிகள் குடியிருக்கும்.
நல்ல வாசனையை உருவாக்கித்தரும்
என் கிராமத்து வீடு
விலை மதிப்பற்றது.
நல்ல வசனையை உள்ளிழுக்கத் திணறும்
என் நகரத்து வீடு
விலை மதிப்புள்ளாது.
8.
வீட்டில் இருப்பவர்களை
தயவு செய்து வெளியில் போங்கள் என்று
விரட்டும் நாளில்
வீடு சூன்யமாகி விடுகிறது.
ஒரு கலவரம் முடிந்த பிற்பாடு
வீட்டின் வலிமையான எலும்புகள்
முறிந்து கிடக்கின்றன.
பிறகு அது கூட
பலமாதங்களாகும்.
வருடங்கள் தண்டும்.
வீட்டின் நிசப்தம்
நம்மை ஞானியாக்கும்.
வீட்டின் இரைச்சல்
நம்மை சூன்யமாக்கும்

1.


குட்டி கைப் பையோடு
உத்யோகத்திற்கு விரையும்
சீனத்துக்காரி வெளியேறுவதற்கு
முன்னதாக ஆடியில் காண்கிறாள் முகத்தை.
குட்டை பாவாடை குறுஞ் சிரிப்பு
தோன்றி மறைகிறது அதில்.
அலுவல் அழைக்கும் நேரம்
முகத்திற்கு பொலிவு கூடுகிறது.
மாலை காய்ந்த குப்பையாகிவிடும் என்பதை அறிவாள்.
ஆடியில் விழும் முகம்மெல்ல அலையுறத் தொடங்குகிறது.
தலைக்கு அவள் சூடியிருந்தவாசனை மலர்கள் தழைத்து அரும்புகின்றன-
ஒரு வைகறைத் தோட்டத்தின் வைராக்யத்தோடு.
2.
ஒரு இளவரசனைப் போல கம்பீரம்-
தேர்ந்த நடிகனின் மிடுக்கு-
மர சாய்வு நாற்காலியில் சாய்கிறேன்.
என் பார்வை தாண்டிப் போகிறது-
நகரத்தை,
தோட்டத்தை,
தேசத்தின் வரைபடத்தை,
இப்போது என் தலையை கழற்றி வீசுகிறேன்.
அழகிய ஒரு பூ ஜாடியைப் போல
ஒரு ரோஜாவை அதில் செருகுகிறேன்.
இன்னும் நிறைய வண்ண மலர்கள்
எனக்கு முகம்.
மலர்களின் தோட்டம்-
இளவரசனின் கம்பீரம்-
நடிகனின் மிடுக்கு-
எல்லாம் பொறுந்திய என் முகம்
இன்று முதல்
அழகிய மலர்கள் அரும்பும்
பூக்குடை.


3


நட்சத்திரத்திற்கு
விரல் முளைத்த நளில்
தேவகுமாரன் பூமிக்குள் நுழைகிறான்.
கிறிஸ்துவின் மின் விளக்கு மரம்
வீட்டை ஒளிரச் செய்யும் வேளை
சகலரது வீடுகளிலும்
பசுமைத் தழைக்க முளைவிடுகிறது-
ஒற்றை வால் நட்சத்திரம்.
வானத்தின் கீழ்
வண்ண வண்ண கிறிஸ்து மரம்
ஆயிரமாயிரம் வால் தரித்த
கலர் கலர் நட்சத்திரங்கள்
ஒளி கொட்டும் டிசம்பர் மாதத்தில்
எல்லோரது வீட்டிற்கும்
தேவைப்படுகிறார் ஒர் மீட்பர்.
4.வானத்து கீழாக
திறந்துக்கிடக்கும் பெட்டினுள்
கொட்டிக் கொண்டே இருக்கிறது
குட்டிக் குட்டி நட்சத்திரங்கள்.
நிறையாத அப் பெட்டியை நிறைக்க
பேரின்பத்தோடு போராடுகிறான் ஒருவன்.
நிறையாத அப் பெட்டியைப் பூட்டும்
சாவிக்கு எதிராக
பெரிதாகிக் கொண்டே போகிறது
தூவாரம்.

Saturday, September 23, 2006

ஆர்.பி.பி.யின் பூனை

நடுஜாமத்தில் உறவுக்கு அழைக்கும் கெடாப் பூனையின் அடித் தொண்டைக் குரல் தடிக்கிறது சொற்ப வரும்படியில் ஜீவிக்கும் தாம்பத்யம் பண்ணாதவனை சேர்த்து எங்கோ கிளப்பிக்கொண்டு போகிறது அது. கித்தானில் விளையாடும் ஆர்.பி.பி.யின் பூனைகள் நினைவு மேட்டில் ஏறி காதுகளை உயர்த்துகின்றன.வாலை கொடிபோல் ஆட்டுகின்றன.மொட்டை மாடியை அங்கிட்டும் இங்கிட்டும் அல்லோலப்படுத்துகின்றன.இரவு புகாரற்றுத் திரும்பும் பெட்டைப் பூனை மீதேறி இருட்டின் சுவர்களை உடைக்கிறது கெடா. வெண் புனல் பொங்கி ஜாமத்தை நனைக்கிறது இருட்டின் கருமை கரைந்து பொள பொளவென புலர்ந்து வருகிறது பகற்பொழுது.மாலைஉயர்த்தி நடப்பட்ட கூடையை நோக்கி பந்தைப் போட முயலும் ஆட்டக் கலைஞனைப் போல சூரியனைக் கொண்டு வந்து இருட்டின் கூடைக்குள் போடுகிறது பகல்.ஒரு சிறுமியின் உற்சாகம் ஒத்து சுறுசுறுப்படையும் பகற்பொழுதை இரவு விடாமல் விரட்டிக்கொண்டே ஓடுகிறது. பெரிய பெரிய வலைகள்.வரையறுத்த விதிமுறைகள்.தீர்மானிக்கப்பட்ட கோடுகள்.ஆட்டக் கலைஞன் தன் வேலைகளை வேகப்படுத்துகிறான்.இலக்குத் தவறி விழும் பகற் பந்தை எடுத்துப் போட சரசரவென்று மேற்கே இறங்கிக் கொண்டிருக்கிறது மாலை


தடுமன் எழுத்துசதுர சதுரமான உயர்ந்தோங்கியச் சுவர்கள்.வளர்ந்து நிற்கும் மருத்துவமனை. தொங்கி அலுக்காத தடுமன் தடுமன் எழுத்துக்கள். வாசித்துக் கொண்டு வருகிறான் வயசாலி.மருத்துவ மனைக்கு வெளியே நீண்ட கண்களை இழுத்து வந்து மருந்தருந்த வைக்கிறான் கம்பெளண்டர்.தடுமன் தடுமன் எழுத்தினைக் கூட்டி மருத்துவர் படிக்கச் சொன்னதும் மறைந்தொளியும் எழுத்துக்களைப் பிடிக்க நீண்ட படிக்கட்டுகளை தழுவத் தொடங்கின வயசாளியின் கால்கள்.தன் வாழ்வை எழுதுபவன்தூரத்து சந்திரன் நடுவானில் தொங்க தன் இரட்டை எருதுகளை இரை பொறுக்க விட்டுவிட்டு எதையோ உற்று நோக்கியவனாய் நின்றிருக்கிறான் ஒருபழங்குடி. நிலவொளி ஒவ்வொரு கம்பியாக நீண்டு அவனது முகத்திற்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்தது.இறந்துபோன பருந்தொன்றின் இறகுகளை கற்றையாக்கி தலைக்கு கிரீடம் தரித்தவன் மேய்ப்பு நிலத்தின் மீதாக தன் பார்வையை அப்படியே மேய விடுகிறான்.பால் மஞ்சளாறு அவன் மீது விழுந்து கடந்து நகர்கிறது.தேர்ந்த தைல ஓவியத்திற்கு இணையான வாழ்வை அவன் மெல்ல எழுத ஆரம்பிக்கிறான்.விநோதி


தேகம் முழுக்க ஓவியங்களை வரைந்திருப்பவளை எனக்குத் தெரியும்.அவள் கழுத்துப் பகுதியில் பல வருடங்களாக நீந்திக் கொண்டிருக்கும் கலம் கரை சேர முடியாமல் துறைமுகத்தை தேடிக்கொண்டிருக்கிறது.அவள் புன்னகைக்கும் உதட்டோரம் ஆண் புலியொன்று தன் முன்னங்கால் உயர்த்தி எப்போதும் நர்த்தனம் பண்ணுகிறது.அவள் இருதயத்தைத் துளைத்துக் கொண்டிறங்கும்காதல் அம்பொன்று என்னை சதா இம்சிக்கிறது. தாமரைக் கொடிகள் மடித்து உடல் சர்வமைக்கும் அவள் பந்தலிட்டிருக்கிறாள்.அங்கொன்றும் இங்கொன்றும் அல்லி கமலம் மல்லி முல்லை குறிஞ்சி காந்தள் பூத்துக் கொட்டுகின்றன.ஒற்றைக் கொம்பின் மீதேறி தோகை அகல மயில் அகவிப்பாடுகிறது.தாம்புக் கயிரென பின்னிய அவள் கூந்தலில் பாரம்பரியம் வேர்க்கட்டுகிறது. கிளி பேச, மயில் ஆட, மான் தாவ, பறவைகள் சல்லாபிக்க, அவளது மோக கொடி இழைகள் காண்போரை சிறைப் பிடிக்க அலைகின்றன.

Tuesday, September 12, 2006

ஒரு நூற்றாண்டு கடந்தப் பின்னும் சில கருத்தியல்களுக்கு தேவை அவசியமாகிறது. அப்படியே ஒரு கருத்திற்கு தொடர்ந்து அவசியம் உண்டாகிறதென்றால் அச் சமூகம் கீழன மட்டத்திலேயே பயனிக்கிறதென்றுதானே அர்த்தம். அப்படி பின்னுக்கிருக்கும் போக்கை மாற்ற ஒரு சில அசைவுகளையேனும் நாம் செய்து உந்திக்கொண்டிருந்தல் தானே அது தகும்.அப்படி உந்தும் முயற்சியே இது.அதன் பொருட்டு உங்களை அழைக்கிறேன்.. வாருங்கள் தோழமைகளே

Wednesday, September 06, 2006