Wednesday, September 27, 2006

கடற்கரய் கவிதைகள்

வீடு




1.



நிசப்தம் இறைந்து கிடக்கும்
வீட்டுக் கதவினைத் திறந்து
உள் பிரவேசிக்கின்றேன்.
அருகம் புல் மீதமர்ந்த பனித்துளி போன்று
சோபை கொண்டிருந்த
நிசப்தத்தின் மேலூர்ந்து
என் மென் பாதங்கள் செம்மறியாக மேய்கையில்
சட்டென்று உறைந்து பனிகட்டிகளாகின.
வீட்டின் சீதோஷ்ணம் குறையக் குறைய
வீட்டின் உள் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன் நான்.
தரை படிந்திருந்த திவலைகள் முழுக்கபனிக்கட்டியாகி
வீடு விறைக்கையில்
மெல்ல நிசப்தம் என் மீது மழையெனக் கவிழ்கிறது.
இதுயென் அடர்த்தியின் அளவை
ஒரு பக்கம் கூட்டிக் கொண்டேவும் செல்கிறது.
வீட்டின் உள்ளிருந்த நிசப்தம்
இப்பொழுது என்னுள் கூடு கட்டுகிறது.




2.




வீட்டிடமிருந்து கற்றுக் கொள்ள
என்ன இருக்கிறது நமக்கு.
எதற்கும் மௌனம் சாதிக்கும் அதனிடமிருந்து
எதை நாம்கிரகித்துக் கொள்ள இயலும்.
சகல சௌந்தர்யங்களையும்தனக்குள் அமுக்கிக் கொண்டு
வீங்கி வெடித்திராமல்பரிதவிக்குமதன் மனப்பாங்கும்
எதற்குதவும்.
ஒன்றிடமிருந்து எதை நாம் கற்றுக் கொண்டோமோ
அதை வைத்தே அவற்றை நாம் மடக்குகிறோம்.
புதிய வீடு
புது மொழியையா நமக்குப் பயிற்றுத் தருகிறது.
புதுமையென எதை நம்பினோம் நாம்.
வீட்டிடமிருந்து கிரகிக்க உள்ளது ஏராளம்.
நிசப்தம் தழைக்கத் தருவாகி நிற்கும்
அதன் விசால மனப்பாங்கிலிருந்து கற்றுக்கொள்:
ஒரு மிடறு நிசப்தத்தை.




3.



முடிக்கப்படாத ஆட்டத்தின் சொச்சமாய்
வீடு முழுக்க இறந்து கிடக்கின்றன
கேரத்தின் காய்கள்.
ஆடப்படாத ஓர் ஆட்டத்தின் துவக்கமாய்
ஓர் ஆட்டத்தையாட
எண்ணிக்கொண்டபடி
சிதறிய சில்லுகளை சேகரித்தேன்.
அனேகத்தையும் ஓரிடம் குவித்தேன்
முற்றுப் பெறாத ஓர் ஆட்டம்
துவங்கப்பெறாதஓர் ஆட்டம்
சிதிலமடைந்த ஓர் ஆட்டம்
எவ்வாட்டம் உகந்தது.
ஆடத்துவங்கும்
என்னாட்டத்திற்கு முன்னதாக
நாலாத் திசைகளிலிருந்து
கணையாய்த் தாக்கி
ஆடிக் கொண்டிருந்தன
கேரத்தின் காய்கள்
எதற்கும் நன் நகர்ந்தே இருக்கிறேன்.




4.



யாரும் இல்லாத வீட்டில்
மர்ம உறுப்புகளைப் பிடித்து
சுவைத்துக் கொண்டிருக்கிறா(ள்)ன்.
விழுதெனக் கிளைக்கும்
எல்லா அறையிலும்யாரோ ஒருவன்(ள்)
நம்மைச் சுகித்துக் கொண்டே இருக்கிறான்(ள்)
தன் அகோர நகங்களை வேரெனப் பாய்ச்சி
நமக்குள் சுகம்தேடும் அவனது-அவளது விரலில்
காமத்தின் அனேக முகங்கள் பிரதிபலிக்கின்றன.
யாரும்மற்ற வீடுகளில்
தனித்திருக்கும் ஒருவ(ளோ)னோடு
அங்கில்லாதவர்களும்
இருந்து கொண்டிருக்கிறார்கள்.
எண்ணாத்தில் உருக்கொள்ளும்
வெவ்வேறு முகத்தினை
யாருமற்ற வீட்டிற்கு
அவனா(ளா)ல் மட்டுமே கொன்டு வர இயலும்.
யாருமற்றா வீடே
நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கிறது.
யாருமில்லாத வீட்டில்
யார் யாரோ இருக்கிறார்கள்.




5.




சொல்ல முடியாத துக்கத்தினால்
நிரம்பிவழிகிறது வீடு.
மாறாக ஒரு தினம்
மகிழ்ச்சியினால் நிரம்பிவிடக் கூடும்.
அந்நாளில் அத்துவானத்திலிருந்த
அழகிய தேவதைகள்
நம் வீட்டை ரட்சிப்பார்கள்.
தேவனது விசாரிப்புக்கள்
உங்கள் கதவினை வந்து முறையிட்டு நிற்கும்
அந்நாளில்.
வீட்டின் கொள்ளளவிற்கேற்ப
வீட்டின்ஆரவாரம் கூடிக் கொண்டேவும் செல்கிகிறது.
சின்னஞ்சிறு வீட்டின் கொள்ளாத்த பாத்திரமாய்
மகிழ்ச்சி நிரம்புகையில்
அது,வேறுவேறு வீட்டிற்கும் பரவுகிறது.
எல்லா வீடும் விருந்தினர் பொழுதுகளை
ரம்மியமாக்கித் தருகின்றன.
இம் மந்திரத்தை கடவுள் வீடுகளுக்குப் பழக்கியிருக்கிறார்.
ராதையின் ரம்மியம் நமக்குள் ரகசியமாகிறது.
சிவந்த நெஞ்சில் காய்கள்
பழுத்துக் கனிகளாக உதிர்கின்றன.
விஜயத்தின் வீர்யத்தில்
ஏழு லட்சம் விளக்குகளை
எரியவைத்துவிடலாம் நீங்கள்.
ஒரு வீட்டின் மகிழ்ச்சி
கொஞ்ச தூரங்களை எட்டுகிறது,
ஒரு வீட்டின் துக்கம்
மாறாகபல மைல்களைத் தண்டி விடுகிறது.




6.




வீடில்லாதவர்களுக்கு
வீட்டைப்பற்றிய கனவுகள்
பெரிதாக இருக்கின்றன.
வீடுள்ளவர்களுக்கு
வீட்டின்அசௌகர்யங்களே
பிரதானமாகின்றன.
வாடகை வீட்டு மனம்
ஒரு சொந்த வீடு கேட்கிறது.
சொந்த வீட்டு மனம்
வடகைக்கு ஏங்குகிறது.




7.




வீடுகள்
வித விதமான வாசனைகளால் நிரம்பியது.
குறிப்பிட்ட உபாசனை
சில வீடுகளை நினைவுறுத்தும் நமக்கு.
வீடுகள் தனக்கென்றே
ஒரு ப்ரத்யேக வாசனையை
உருவாக்கிக் கொள்கின்றன.
உபாசனையோடு வந்து நசியைத் தட்டும்
அதிகாலை
முற்றத்தில் நட்சத்திரங்களைக் கொண்டுவந்து
கட்டிப் போட்டிருக்கிறது.
சுகந்தம் உள்ள வீட்டில்
பட்டாம் பூச்சிகள் குடியிருக்கும்.
தனியங்கள் வாசனை தூக்கலாய் இருக்கும்
என் பூர்வீக வீட்டில்
குருவிகள் குடியிருக்கும்.
நல்ல வாசனையை உருவாக்கித்தரும்
என் கிராமத்து வீடு
விலை மதிப்பற்றது.
நல்ல வசனையை உள்ளிழுக்கத் திணறும்
என் நகரத்து வீடு
விலை மதிப்புள்ளாது.




8.




வீட்டில் இருப்பவர்களை
தயவு செய்து வெளியில் போங்கள் என்று
விரட்டும் நாளில்
வீடு சூன்யமாகி விடுகிறது.
ஒரு கலவரம் முடிந்த பிற்பாடு
வீட்டின் வலிமையான எலும்புகள்
முறிந்து கிடக்கின்றன.
பிறகு அது கூட
பலமாதங்களாகும்.
வருடங்கள் தண்டும்.
வீட்டின் நிசப்தம்
நம்மை ஞானியாக்கும்.
வீட்டின் இரைச்சல்
நம்மை சூன்யமாக்கும்

2 Comments:

Blogger ஜெ.நம்பிராஜன் said...

தனிமையும் நினைவுகளும் மட்டுமே நிரம்பிய வீட்டில் வெறுமை சிறிது சிறிதாய் தின்பதை மனம் உணர்ந்ததுண்டு. வரிகளில் அதை வடித்த விதம் அருமை. வீட்டைப் பற்றிய சிந்தனை வீடுள்ளோர்க்கு மட்டுமன்று வீடற்றோர்க்கும் உண்டு.கடற்கரயின் கவிதை கடற்கரையோர வீட்டைப் போன்றே சுகமானது.

3:32 AM  
Blogger கடற்கரய் said...

ஜெ.நம்பிராஜன் உங்களின் கருத்திற்கு நன்றி. உற்சகம் தரும் உங்களின் வருகைக்கும்.

6:33 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home